ஒற்றை பார்வை, கீற்று புன்னகை
காற்றின் மகள் நான் சட்டென கடந்து செல்வேன்
நிலத்தின் மகன் நீ நகராமல் வியந்து நிற்பாய்
உன்னை நான் உறைய வைக்க , என்னை மட்டும் கரைய வைத்தாய்
ஊடுருவும் பார்வை துளைத்து எத்தனை மூங்கில்கள் புல்லாங்குழல் ஆயினவோ ?
மந்திரப் புன்னகை வீசி எத்தனை மங்கையர் மயங்கினரோ ?
அத்துணை கர்வம் சுமந்தும் வீழாமல் எப்படி தான் லாவகமாய் நடக்கிறாயோ ?
மின்மினி பூச்சிக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் தூரத்து நட்சத்திரம் நீ
அண்ணாந்து பார்க்கும் அந்த அழகான பூச்சி நான்
கூர்வாள் சிந்தனைக்காரன் நீ
மல்லிகை மனதுக்காரி நான்
மறந்து விடாதே...வெட்டியும் முட்டியும் திறப்தில்லை மலர்கள்...
பூங்காற்று தொட்டு திறப்பன அவை!
பெண்பூக்கள் தோட்டத் தலைவனுக்கு தாமரை மீது மோகம்
தாமரைக்கோ இனி வேறு மலர் தொடாத தேனீ ஒன்று வேண்டும்
தொலைந்து போன ஒரு பொறியைத் தேடி கொடுத்துவிட்டு
பதிலுக்கு தீப்பந்தம் ஏற்ற அழைக்கிறாய்...
மன்மதனின் மாமன் மகன் போல நீ..
சாணக்கிய கெட்டிக்காரி அல்லவா நான்..
கானல் நீர் தொலைவில் தான் தெரியும்
அருகில் சென்றால் கரையும்
இவை யாவுமே பிரம்மை போல் உணரப் பிடிக்கிறது
அதனால் மட்டும் தான் சுவையாய் இருக்கிறது
நிதர்சனங்களில் ஏனோ வண்ணமும் வாசமும் நிலைப்பதில்லை
அதனால் தான் இவளுக்கு நிஜங்கள் அவ்வளவாய் பிடிப்பதில்லை
சொல்லாத வார்த்தைகள்
இல்லாத நெருக்கங்கள்
பார்க்காத பார்வைகள்
கடக்காத பாதைகள்
நடக்காத தூரங்கள்
நமக்கிடையேயான எதுவோ இது - உறைந்து போன ஓர் உதிராத பூ
மரபுகள் மீறிய கனவு ஒன்று; பலிக்காதது கனவுக்கு நன்று
காலங்கள் கடந்து ஓடும், நிலவு பல்லாயிரம் தரம் தேய்ந்து வளரும்,
நரை கூடி தளர்ந்த நாளில் , தனிமையில் நினைத்து தேற்றிக் கொள்வேன்
யுகம் யுகமாய் சூரியன் பார்த்து வாழும் ஓர் நிலவை சற்று
திரும்பப் பார்க்க வைத்த மற்றொரு நட்சத்திரத்தைக் கண்டுகொண்டேன் என!
இனி வரவிருக்கும் யுகங்கள் அந்த நட்சத்திர நினைப்பில் கழிந்து கரைந்தோடும்..
இனி நீ தனியே நினைத்து வெட்கப்பட்டு சிரிக்கும் தருணங்கள் எல்லாம் நான் தந்துவிட்டு சென்ற நினைப்பினால் மட்டுமே இருக்கப்போவதே என் வெற்றி!
