Tuesday, March 25, 2014

நீ என்பவன்

நீ என் உயிரா?
நீ என் கனவா?
நீ என் வசந்தமா?
நீ என் பிரபஞ்சமா?
நீ தான் என் காதலா?
எதுவாயினும், நீ இன்றி அமையாது என் உலகம்
நீர் இன்றி அமையா இவ்வுலகம் போல..

Sunday, March 23, 2014

நானும் துணையாய் என் தனிமையும்..


முன்பே தெரிந்தது தான்
பின்பொரு நாளில் பிரிய நேரிடும் என்பது
அனால் அன்றே புரியாதது தான்
இன்றொரு ஓரமாய் அமர்ந்து உனக்காக நான் அழுவேன் என்பது

நான் தீர்க்க தரிசித்ததை நீ அன்றே ஒப்புக் கொள்ளாததன் விளைவு
ரண வேதனையும் இதோ இந்த கவிதையும்...

அந்தி வெய்யில் அணைக்கும் இதமான நேரம்
சந்தடி இல்லாத சாலை ஓரம்
நான் மட்டும் நடந்தேன்
புதைந்த கனவுகளை கடந்தேன்

என் தோள்களை உரசிக்கொண்டே வருகிறது உன் நினைவுகள்
கூடவே வருகிறது பதிந்து அழிந்த உன் பாதத்தடங்கள்
நாசி நுகரும் சுவாசம் வழி உள்ளிறங்கியது
காற்றில் நீ விட்டுச் சென்ற உன் வாசனை
உன்னோடு பேசுவதாய் நினைத்து ஒற்றையாய் உரையாடிக் கொண்டே
நடந்தவளைக் கண்டு எள்ளி நகையாடின அவை
உனக்குப் பிடித்த, நம்மை ஒன்றாய் பார்த்தே பழகிய ரோஜாக்கள்..

ஒரு பூங்கொடி நான் என்று ஏக கர்வம் எனக்கு
நீயின்றி நான் வெறும் சருகு என்று பறைசாற்றியது
நாம் ஒன்றாய் முகம் பார்த்த நீர்த்திரை..

பின்னோக்கி நகர்ந்த நினைவுகளை சுமந்துகொண்டு
முன்னோக்கி அனிச்சயாய் நடக்கிறேன்

நிதர்சனம் இது தான் - நாளை அந்தியில் இளவெயில் இருக்கும்
அந்த ஒற்றையடி பாதை இருக்கும்
அதில் ரோஜாக்களும் சிரிக்கும்
அந்த நீரோடையும் சலசலக்கும்
நீயும் இருப்பாய் நானும் இருப்பேன் - இனி இல்லாததெல்லாம் நாம் மட்டும் தான்...

பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது -
நானும் வழித் துணையாய் நீ தந்துபோன என் தனிமையுமாக!