Wednesday, September 10, 2014

இரண்டற கலந்த முரண்பாடு

 உறைந்த நீர்
வெள்ளை இரவு
சில்லென்ற சித்திரை
நட்சத்திர நிலவு
பூவில் முள்
மெத்தை நிலம்
கனத்த மேகம்
கவிதை கிறுக்கல்
நீ மற்றும் நான்
இரண்டற கலந்த முரண்பாடு ஏனோ அழகானது!


நினைப்பில் நீ...நினைவே நீ

நீலவான் கூட விநாடியேனும் வெளுத்திருக்கும்
கடல் அலை கூட சற்றேனும் ஓய்ந்திருக்கக்  கூடும்
நேரம் கூட விடாமல் ஓடுவதை ஒரு கணம் மறந்திருக்கக் கூடும்
பூமி கூட சுழன்றுகொண்டே இருக்க சற்று சலித்திருக்கும்
என் மனம் மட்டும் நிறுத்தாமல் உன்னை நினைத்துக்கொண்டே இருக்கிறது

கடல், வான், பூமி, நேரம், காலம் இவை யாவும் கடந்த உன் நினைப்பை
அசாதாரணமாக ஒரு பார்வை மட்டுமே வீசி கொடுத்துவிட்டுப் போகிறாய்

உன் சாம்பல் நிறக்  கண்கள்  என்ன நினைவு  உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையா ?

பூவில் தேன் தேடி சுவைக்கும் வண்டு நீயடா
பாலைவனத்தில் சிக்குண்ட நீர் தேடும் பறவை நானடா


Wednesday, September 3, 2014

பேதை நிலா


வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்தோம்..
'நாம் பிரிந்து விடுவோம்' என்றாள் அந்த நிலா.
நான் தான் அவளின் ஒற்றை வானம் என்பது கூட புரியாமல்!

Sunday, July 6, 2014

என்னடா நினைப்பு உனக்கு


எங்கிருந்து புறப்பட்டாய் 
எதற்கென தோன்றினாய் 
எப்பொழுது என் கண்ணில் விழுந்தாய் 
எத்தருணத்தில் மீண்டு எழுந்தாய் 
எங்கெங்கோ விரட்டினாய், நெருங்க சொல்லி மிரட்டினாய் 
தாகங்கள் தந்தாய், தீர்க்கவென்று முன்னே வந்தாய் 
உடன் நடந்தாய், நான் இட்ட தடை கடந்தாய் 
நினைப்பில் கடை விரித்தாய், மல்லிப்பூ மனம் பறித்தாய் 
தீவிரமாய் படை எடுத்தாய், கட்டி வைத்து ஒழுக்கம் கெடுத்தாய்
'என்னடா நினைப்பு உனக்கு?' என்றேன் 
'உன் நினைப்பு மட்டும் தான்' என்றாய் 
கவிதையாய் தான் பேசுகிறாய், அழகனாய் இருக்கிறாய் 
ஐயோ..எந்த கொள்ளியிட்டு கொளுத்த 
இந்த பாழாய்ப்போன இயலாமையை.....

Monday, June 30, 2014

அவன் அமுது

கோடை தாகம் தீர்க்க வேண்டி
அன்னப் பறவை போல் ஒருத்தி அவன் குளம் நாடி வந்து
கால் நனைத்து, சற்றே நீர் குடித்து, 
அது லேசாய் இனிக்க, அவள் மெல்ல இறங்கி பார்க்க
அது மெல்ல மெல்ல மேலும் உள்ளிழுக்க,
நிமிடத்தில் கழுத்து வரை மூழ்கி இருக்க,
முற்றிலுமாய் மூழ்கியவளை  சுற்றிலும் பரவியது அந்த திரவியம்..

சட்டென இருள் சூழ்ந்து மூச்சு முட்டுகையில் உணர்ந்தாள்..
இது நீர் அல்ல, இவன் காதல் அமுது என!

வெளிவர வேண்டவும் இல்லை, 
இனி அது தேவையும் இல்லை.

அவன் அமுதில் அமிழ்ந்து சாவதை விட என்ன பெரிய இன்பம் இருந்து விடப் போகிறது, வெளியே இருக்கும் அந்த வெற்று பூமியில் ?




Tuesday, March 25, 2014

நீ என்பவன்

நீ என் உயிரா?
நீ என் கனவா?
நீ என் வசந்தமா?
நீ என் பிரபஞ்சமா?
நீ தான் என் காதலா?
எதுவாயினும், நீ இன்றி அமையாது என் உலகம்
நீர் இன்றி அமையா இவ்வுலகம் போல..

Sunday, March 23, 2014

நானும் துணையாய் என் தனிமையும்..


முன்பே தெரிந்தது தான்
பின்பொரு நாளில் பிரிய நேரிடும் என்பது
அனால் அன்றே புரியாதது தான்
இன்றொரு ஓரமாய் அமர்ந்து உனக்காக நான் அழுவேன் என்பது

நான் தீர்க்க தரிசித்ததை நீ அன்றே ஒப்புக் கொள்ளாததன் விளைவு
ரண வேதனையும் இதோ இந்த கவிதையும்...

அந்தி வெய்யில் அணைக்கும் இதமான நேரம்
சந்தடி இல்லாத சாலை ஓரம்
நான் மட்டும் நடந்தேன்
புதைந்த கனவுகளை கடந்தேன்

என் தோள்களை உரசிக்கொண்டே வருகிறது உன் நினைவுகள்
கூடவே வருகிறது பதிந்து அழிந்த உன் பாதத்தடங்கள்
நாசி நுகரும் சுவாசம் வழி உள்ளிறங்கியது
காற்றில் நீ விட்டுச் சென்ற உன் வாசனை
உன்னோடு பேசுவதாய் நினைத்து ஒற்றையாய் உரையாடிக் கொண்டே
நடந்தவளைக் கண்டு எள்ளி நகையாடின அவை
உனக்குப் பிடித்த, நம்மை ஒன்றாய் பார்த்தே பழகிய ரோஜாக்கள்..

ஒரு பூங்கொடி நான் என்று ஏக கர்வம் எனக்கு
நீயின்றி நான் வெறும் சருகு என்று பறைசாற்றியது
நாம் ஒன்றாய் முகம் பார்த்த நீர்த்திரை..

பின்னோக்கி நகர்ந்த நினைவுகளை சுமந்துகொண்டு
முன்னோக்கி அனிச்சயாய் நடக்கிறேன்

நிதர்சனம் இது தான் - நாளை அந்தியில் இளவெயில் இருக்கும்
அந்த ஒற்றையடி பாதை இருக்கும்
அதில் ரோஜாக்களும் சிரிக்கும்
அந்த நீரோடையும் சலசலக்கும்
நீயும் இருப்பாய் நானும் இருப்பேன் - இனி இல்லாததெல்லாம் நாம் மட்டும் தான்...

பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது -
நானும் வழித் துணையாய் நீ தந்துபோன என் தனிமையுமாக!


Thursday, February 13, 2014

மன்மதனின் மாமன் மகன் ஒருவன்



ஒற்றை பார்வை, கீற்று புன்னகை
காற்றின் மகள் நான் சட்டென  கடந்து செல்வேன்
நிலத்தின் மகன் நீ நகராமல் வியந்து நிற்பாய்
உன்னை நான் உறைய வைக்க , என்னை மட்டும் கரைய வைத்தாய்

ஊடுருவும்  பார்வை துளைத்து எத்தனை மூங்கில்கள் புல்லாங்குழல் ஆயினவோ ?
மந்திரப் புன்னகை வீசி எத்தனை மங்கையர்  மயங்கினரோ ?
அத்துணை கர்வம் சுமந்தும் வீழாமல் எப்படி தான் லாவகமாய் நடக்கிறாயோ ?

மின்மினி பூச்சிக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் தூரத்து நட்சத்திரம் நீ
அண்ணாந்து பார்க்கும் அந்த அழகான பூச்சி நான்

கூர்வாள்  சிந்தனைக்காரன் நீ
மல்லிகை மனதுக்காரி நான்
மறந்து விடாதே...வெட்டியும் முட்டியும் திறப்தில்லை மலர்கள்...
பூங்காற்று தொட்டு திறப்பன அவை!

பெண்பூக்கள் தோட்டத் தலைவனுக்கு தாமரை மீது மோகம்
தாமரைக்கோ இனி வேறு மலர் தொடாத தேனீ ஒன்று வேண்டும்

தொலைந்து போன ஒரு பொறியைத் தேடி கொடுத்துவிட்டு
பதிலுக்கு தீப்பந்தம் ஏற்ற அழைக்கிறாய்...
மன்மதனின் மாமன் மகன் போல நீ..
சாணக்கிய கெட்டிக்காரி அல்லவா நான்..

 கானல் நீர் தொலைவில் தான் தெரியும்
அருகில் சென்றால் கரையும்
இவை யாவுமே பிரம்மை போல் உணரப் பிடிக்கிறது
அதனால் மட்டும் தான் சுவையாய் இருக்கிறது
நிதர்சனங்களில் ஏனோ வண்ணமும் வாசமும் நிலைப்பதில்லை
அதனால் தான் இவளுக்கு நிஜங்கள் அவ்வளவாய் பிடிப்பதில்லை

சொல்லாத வார்த்தைகள்
இல்லாத நெருக்கங்கள்
பார்க்காத பார்வைகள்
கடக்காத பாதைகள்
நடக்காத தூரங்கள்
நமக்கிடையேயான எதுவோ இது - உறைந்து போன ஓர் உதிராத பூ
மரபுகள் மீறிய கனவு ஒன்று; பலிக்காதது கனவுக்கு நன்று

காலங்கள் கடந்து ஓடும், நிலவு பல்லாயிரம் தரம் தேய்ந்து வளரும்,
நரை கூடி தளர்ந்த நாளில் , தனிமையில் நினைத்து தேற்றிக் கொள்வேன்
யுகம் யுகமாய் சூரியன் பார்த்து வாழும் ஓர் நிலவை சற்று
திரும்பப் பார்க்க வைத்த மற்றொரு நட்சத்திரத்தைக் கண்டுகொண்டேன் என!

இனி வரவிருக்கும்  யுகங்கள் அந்த நட்சத்திர நினைப்பில் கழிந்து கரைந்தோடும்..

இனி நீ தனியே நினைத்து வெட்கப்பட்டு சிரிக்கும் தருணங்கள் எல்லாம் நான் தந்துவிட்டு சென்ற நினைப்பினால் மட்டுமே இருக்கப்போவதே என் வெற்றி!